Friday, December 28, 2007

நான் சினிமா டைரக்டர் ஆனபோது! - ஜெயகாந்தன்!


என்னுடைய ஸ்கிரிப்ட்டை Execute செய்வதற்கான திறமை எனக்கு போதாது. அதற்கான பொறுமையும் கிடையாது என்பது டைரக்ஷன் செய்து நான் பெற்ற அனுபவம். சினிமாவில் நானும் காலடி வைத்தேன். அந்தத் துறையிலே அடி நானும் வாங்கினேன், கொடுத்தேன். அதைப் பற்றியெல்லாம் இப்போது நினைத்து பார்த்தால் சந்தோஷப்படவும் பகிர்ந்து கொள்ளவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

சிறு வயதிலே கூட நான் சராசரியான சினிமா ரசிகனாக இருந்ததில்லை. படங்களைத் தேர்ந்தெடுத்துதான் பார்ப்பேன், ரசிப்பேன். கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைமை அலுவவலகம் அன்று தரமான ஆங்கிலப் படங்களைத் திரையிடும் ஒரு தியேட்டரின் அருகில் இருந்தது. நல்ல நல்ல படங்கள் வரும். அதைப் பார்க்க வரும் ரசிகர்களும் தரமானவர்களாக இருப்பார்கள்.

எத்தனையோ நல்ல படங்களை பார்க்கும் வாய்ப்பு அங்கே எனக்குக் கிடைத்தது. அவை எல்லாம் மேனாட்டுப் படங்கள். பிரிட்டிஷ் படங்கள், அமெரிக்கப் படங்கள், எப்போதேனும் இத்தாலியப் படங்கள் வரும். அப்படி ஒரு அன்னிய சினிமா மோகம் ஒரு காலத்திலே எனக்கு ஏற்பட்டது. அதுபோல அவற்றுடன் தமிழ் சினிமாவை ஒப்பிட்டுப் பார்த்தபோது எனக்கு வெட்க உணர்ச்சியே மேலோங்கியது.

நான் அறிந்த வரையில் அந்தக் கால ரசிகர்கள் எல்லாம் பெரிய மனிதர்களாக இருந்தார்கள். நடிகர்களும் அதுபோலவே பெரிய மனிதர்களாக இருந்தார்கள். என்னதான் நமக்கு அபிமானம் உள்ள ரசிகர்கள் இருந்தாலும் நம் அளவு என்ன என்று அளந்து வைத்துக் கொண்டிருந்தார்கள். ரசிகன் நமக்குக் கைதட்டி விடுவதாலேயே அவன் நம்மைவிட குறைந்தவன் அல்ல என்று அறிந்து வைத்திருந்த பண்பு அக்கால சினிமா மனிதர்களிடம் இருந்தது.

நல்ல சினிமா என்பது நல்ல புத்தகம் போல என்பது என் கருத்து! நல்ல படங்களைப் பார்த்து தான் படம் சம்பந்தப்பட்ட என் அறிவை வளர்த்துக் கொண்டேன். எனது அறிவு புத்தகங்கள் படித்து வந்தது இல்லை. ஷேக்ஸ்பியரையும் சார்லஸ் டிக்கன்ஸையும், ஆஸ்கார் ஏயில்டையும், டென்னசி வில்லியம்ஸையும், ஆர்தர் மில்லனையும் நான் படங்கள் வழியேதான் பயின்றேன். ஏனென்றால் எனது இளமைக்காலம் படங்களின் யுகமாக இருந்தது.

ஆனால் தமிழ் சினிமா அன்றும் இன்றும் அதே கீழ்நிலையிலேயே இருக்கிறது. நமது சரித்திரப் பெருமையையோ நமது மண்ணின் கலாச்சாரப் பெருமையையோ அவை எடுத்துச் சொல்ல முன்வந்ததில்லை. அதைப்பற்றி நமது தமிழ் சினிமா ஏதாவது பேசியிருக்குமேயானாலும் அவை வெற்றுப் பம்மாத்துக்களாகவே இருக்கின்றன.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒரு விமர்சகனாகத் தான் இருந்தேனே தவிர, அதன்மீது மோகம் கொண்டவனாகவோ அதனோடு சம்பந்தப்பட வேண்டும் என்ற உந்துதல் உணர்ச்சி உடையவனாகவோ நான் என்றும் இருந்ததில்லை. ஆனால் ஒரு வேலையில்லாத இளைஞன் எதற்கும் ஆசைப்படுவான் அல்லது அவனை எதற்கு வேண்டுமானாலும் அனுப்புவதற்கு யாரேனும் உந்தித் தள்ளிக் கொண்டே இருப்பார்கள். அப்படி என்னைத் தள்ளியபோது ஒரு பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது வயதில் நாடகம் சினிமா என்ற அரங்கங்களுக்குள் நான் திரிந்ததுண்டு.

நாடகத்தில் வேஷம் போட்டதுண்டு, நடிக்கவில்லை, நடிக்க வரவில்லை. நடிப்பு ஒரு விசித்திரமான கலை என்று நான் கண்டு கொண்டேன். மற்ற கலைகளை போல அதற்கொன்றும் இலக்கணம் இல்லை. அவனவன் விதித்தது தான் இலக்கணம் இங்கே. மேனாடுகளில் எல்லாம் அதற்கும் இலக்கணம் வைத்திருக்கிறார்கள். இந்தப் பள்ளிக் கூடத்திலேயிருந்து இவர்கள் வந்தவர்கள் என்று கூட ஒரு படத்தைப் பார்த்து சொல்லி விட முடியும்.

உதாரணமாக ஸ்டானிலாவ்ஸ்கி ஸ்கூலிலிருந்து வந்தவர்கள், ஷேக்ஸ்பியரின் ஸ்கூலிலிருந்து வந்தவர்கள், இந்த நாட்டின் இந்தப் பள்ளியிலிருந்து வந்தவர்கள் இவர்கள் என்று கூடச் சொல்லிவிட முடியும். நடிப்பதை ஒரு கலையாக்கி, அதற்கு இலக்கணம் வகுத்து பயிற்சி தந்து என்று பல துறைகளிலும் விஞ்ஞான பூர்வமாகச் சினிமா இப்படியெல்லாம் அங்கு வந்திருப்பது அங்கே நேர்ந்த வளர்ச்சியின் பயன்கள்.

அப்பொழுது முன்னணியிலிருந்த ஒரு டைரக்டர், நீங்கள் அற்புதமாகக் கதை எழுதுகிறீர்கள். அதுபோல அல்ல சினிமா. வெள்ளைக் காகிதத்தில் பேனா பிடித்து கறுப்பு ஆக்குவதுபோல அல்ல சினிமா! உங்கள் கதையையே நீங்கள் சினிமா எடுத்துப் பார்த்தால் தெரியும் அந்த அனுபவம் என்றார். அப்படியா செய்யலாமே! என்று யோசித்தேன்.

எனக்கு நண்பர்கள் உண்டு. எனது நண்பர்கள் எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆறேழு நண்பர்கள் சேர்ந்து ஒரு லட்ச ரூபாய் வசூலிப்பது என்று தீர்மானித்தோம். என் நண்பர்களில் பண வசதி உள்ளவர்கள் அதிகம் கிடையாது. அப்படியரு பெரிய தொகை திரட்டுவது சிரமம்தான். படம் எடுக்க வேண்டும் என்கிற தாகம் எப்போது பார்த்தாலும் என்னிடம் பல்லை இளித்து கொண்டே இருந்தது - என்னுடைய நண்பர்கள் மூலம். அப்போது ஒரு பெரிய புரொடியூசர். என்னைப் பார்க்கும் போதெல்லாம் சொல்லுவார். நீங்க மட்டும் டைரக்ட் பண்றதுக்கு முடிவு பண்ணிங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்.

ஐயையோ, டைரக்ஷன் பத்தியெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாதே கதை வேணும்னா எழுதித் தரேன் என்று நான் சொன்னேன். அந்த நம்பிக்கை எனக்கு பிறிதொரு சமயம் வந்தது. ஒரு நாள் அந்தப் புரொடியூசருக்குப் போன் பண்ணினேன். உன்னைப் போல் ஒருவன் என்ற ஒரு கதை எழுதினேன். ஆனந்த விகடனிலே ஏற்கனவே ஒருவர் சினிமா எடுத்துப் பார் என்று எனக்கு சவால் விட்டதும், டைரக்ட் செய் என்று இந்த புரொடியூசர் நம்பிக்கை தந்ததும் சினிமாவை மனதில் கொண்டே அந்தக் கதையை எழுதி வைத்தேன்.

எல்லாக் கதையையும் நான் அப்படி எழுதுவதில்லை. அந்தக் கதையை அந்தப் பெரிய புரொடியூசரிடம் போய் சொன்னேன். ஆகா, அற்புதமான கதையாச்சே! செய்ய வேண்டியதுதான் என்றார். ஒரு வேலை என்றால் நான் ராட்சசன் மாதிரி செய்வேன். இரவு பகலாக உட்கார்ந்து ஸ்கிரிப்ட் எழுதினேன். அதைப் படித்துக் காட்டும்படி சொன்னார்கள். படித்துக் கொள்ள வேண்டியது தானே? படித்துக் காண்பிப்பதென்ன? சரி அப்படித்தான் பழக்கம் என்றால் என்ன செய்வது? வேறொருவரை படிக்கச் சொன்னேன்.

படித்தால் கேட்டால்தானே? இட்லி சாப்பிடுவதென்ன? காப்பி குடிப்பதென்ன? சிகரெட் பிடிப்பதென்ன? இந்த கூத்தில் ஸ்கிரிப்ட் படிப்பது வேறு! இது ஒரு அவமதிப்பே! அந்த பெரிய புரொடியூசர் சாப்பிட்டுக் கொண்டே கதை கேட்டதுமல்லாமல், படம் பூராவும் சமைப்பதும் சாப்பிடுவதுமாக இருக்கிறதே என்று வேறு சொன்னார். அடடே, அப்படியா? இந்த வாழ்க்கையின் லட்சியமே அதுதான்! என்றேன்.

இந்த கதையை நம்பி நான் பணம் போட்டா, அதை நான் திருப்பி எடுக்கணுமில்லை? என்று கேட்டார். ரொம்ப அர்த்தமுள்ள கேள்வி. 'சந்தோஷம் வருகிறேன்' என்று பெரிய கும்பிடு போட்டுவிட்டு புறப்பட்டு விட்டேன். உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் தயாரிப்பதற்காக நண்பர்கள் துணையுடன் எண்பதினாயிரம் ரூபாய்தான் திரட்ட முடிந்தது. செலவு பண்ணினால் இடிக்கும் போலிருந்தது. ஆயிரம் ரூபாய்க்கு மேல் நான் யாருக்கும் கொடுக்கவில்லை.

நடிகர்கள், டெக்னீஷியன்கள் எல்லோருக்கும் தலா ஆயிரம் ரூபாய்தான். அதுவும் இரண்டே மாதத்தில் கொடுத்தேன். யாருக்கும் பாக்கியெல்லாம் கிடையாது. சேரிக்கு சென்று படம் எடுப்பதற்கு பதிலாக நான் ஸ்டுடியோவிற்குள்ளேயே ஒரு சேரியை உருவாக்கினேன். பிறகு தான் தெரிந்தது அது அவசியம் இல்லையென்று. உண்மை மாதிரித்தான் இருக்க வேண்டுமே ஒழிய உண்மையே கலை அல்ல.

முதல் ஷூட்டிங்கின் போது எல்லாம் ரெடி, உங்களுடைய ஆர்டருக்காகக் காத்திருக்கிறோம் என்றார்கள். எப்படி ஆர்டர் செய்வது என்ன ஆர்டர் செய்வது என்று எனக்குப் போட்டோயவில்லை. டைரக்டராக நடிக்க அரம்பித்தேன். என்னுடைய உதவியாளரைக் கூப்பிட்டு Start the shouting என்று ஆர்டர் கொடுத்தேன். ”லைட்ஸ் ஆன்... கிளாப்- இன்... ஸ்டார்ட் கேமிரா... ஆக்ஷன்... கட்...” என்றார் முடிந்தது. டைரக்ஷன் என்பது இவ்வளவுதானா? இவ்வளவு மட்டும் இல்லை. இவ்வளவுதான் என்றால் சினிமா இப்படித்தான் இருக்கும்.''

-சோவியத் கல்சுரல் சென்டர் திரைப்பட கருத்தரங்கில் திரு. ஜெயகாந்தன் பேசியதிலிருந்து.

0 comments: