Friday, December 21, 2007

பருத்திவீரன் - 300வது நாள்!


பண்ணிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிமலர் போல சில அபூர்வமான படங்கள் எப்போதாவது வெளிவருவதுண்டு. 2007ஆம் ஆண்டு அதுபோன்று வெளியான திரைப்படத்தில் ஒன்று பருத்திவீரன். இப்படம் வெளியான நேரத்தில் பத்திரிகைகளாலும் ரசிகர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது. எதிர்மறையான இறுதிக்காட்சி அமைந்திருந்தபோதிலும் அது எல்லாத் தரப்பினராலும் கொஞ்சம் அதிர்ச்சியோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்படத்தை பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும் போன்ற சாகாவரம் பெற்ற திரைக்காவியங்களின் வரிசையில் திரைவிமர்சகர்கள் விமர்சித்தார்கள்.

தொலைக்காட்சி, திருட்டு டி.வி.டி. போன்ற பல பிரச்சினைகளால் நூறு நாட்களுக்கு ஒரு தமிழ்படம் ஓடுவதே சாதனை என்றிருக்கும் நிலையில் பருத்திவீரன் தொடர்ந்து முன்னூறு நாட்கள் ஓடி சாதனை படைத்திருக்கிறது.

நாயகன் கார்த்திக்கு இது முதல் படம். முதல்படமே பெரிய வெற்றி பெற்றிருப்பதால் அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்கள் அவரை தங்கள் படத்தில் நடிக்கவைக்க முயற்சித்து வருகிறார்கள். இப்போது செல்வராகவன் இயக்கும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். திரையுலகில் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும்.. பாரதிராஜா, பாலுமகேந்திரா போன்ற பெரிய இயக்குனர்கள் படத்தில் நடித்திருந்தும் கூட சரியான பிரேக் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த பிரியாமணிக்கு இப்படம் சரியான திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களைப் போலவே இப்படத்தில் பங்கு பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் பருத்திவீரன் திருப்புமுனை என்று சொன்னால் மிகையில்லை. இயக்குனர் அமீரையும் சிறந்த தமிழ் இயக்குனர்கள் வரிசையில் நிலைநிறுத்தியிருக்கும் படம் பருத்திவீரன்.

2 comments:

  1. said...

    //தொலைக்காட்சி, திருட்டு டி.வி.டி. போன்ற பல பிரச்சினைகளால் நூறு நாட்களுக்கு ஒரு தமிழ்படம் ஓடுவதே சாதனை என்றிருக்கும் நிலையில் பருத்திவீரன் தொடர்ந்து முன்னூறு நாட்கள் ஓடி// .....!!!

    அறிய ஆவல் இந்தப் படம் நல்ல படம்; ஆனால் ஒரு படம் பார்க்க எவ்வளவோ வசதிகள்
    உள்ள காலத்தில் இப்படம் தொடர்ந்து...காண்பிக்கப்படுகிறதா??
    ஒரு காட்சிக்கு இப்போ எத்தனை பார்வையாளர்கள் வருகிறார்கள்.
    அத்துடன் 7 பார்வையாளர்கள் இருந்தால் அந்தக் காட்சியை ரத்து செய்யமுடியாது...
    அந்த நாட்களில் எம்ஜிஆர்,சிவாஜி போட்டியுள்ள காலத்தில் "சாந்தி" யில் மாத்திரம் சிவாஜி படம் 100 நாளுக்கு மேல் ஓடும்...அதாவது ஓட்டப்படும்..
    அப்படி இந்த திரையரங்குக்கும் கார்த்திக்குக்கும் எந்தத் தொடர்புமில்லைத் தானே!!!
    மீண்டும் கூறுகிறேன்....பருத்திவீரன் சமீபகாலப் படங்களில் நல்ல படம் ஒன்று..அத்துடன் அமீர்
    சிந்தனைத் தெளிவுள்ள இயக்குநர்...

    ஆனால் இவை மாத்திரம் இன்றைய நாட்களில் படம் ஓடப் போதுமானவை அல்ல..

  2. said...

    //அறிய ஆவல் இந்தப் படம் நல்ல படம்; ஆனால் ஒரு படம் பார்க்க எவ்வளவோ வசதிகள்
    உள்ள காலத்தில் இப்படம் தொடர்ந்து...காண்பிக்கப்படுகிறதா??
    ஒரு காட்சிக்கு இப்போ எத்தனை பார்வையாளர்கள் வருகிறார்கள்.
    அத்துடன் 7 பார்வையாளர்கள் இருந்தால் அந்தக் காட்சியை ரத்து செய்யமுடியாது...//

    இந்தப் படம் நன்றாகவே ஓடுகிறது யோகன். சந்தேகம் தேவையில்லை. சென்னையில் இரு தியேட்டர்களில் 300 நாட்களை கடந்திருக்கிறது. இப்படத்தை நஷ்டத்துக்கு ஓட்ட வேண்டிய நிலையில் எந்த திரையரங்கமும் இல்லை.