Thursday, December 13, 2007

தியேட்டர் தொழில் - சினி சிப்ஸ்!

கடந்த சில ஆண்டுகளாக சிறு தயாரிப்பாளர்கள் மற்றும் பெரிய சினிமா நிறுவனங்கள் மட்டுமே சினிமா தயாரித்து வந்த நிலைமாறி கார்ப்பரேட் நிறுவனங்கள் சினிமா தொழிலில் இறங்கியிருக்கிறது. செலவு பற்றி கவலைப்படாது படத்தயாரிப்பில் தரம்-பிரும்மாண்டம், சகல வசதிகளை கொண்ட திரையரங்குகள், பரவலான விநியோகத்துக்கு உதவியாக புதிய மார்க்கெட்டிங் யுக்திகள் போன்ற விஷயங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் திரையுலகத்துக்கு கிடைக்கும் பலன். திருட்டு விசிடி போன்ற விஷயங்களால் தடுமாறி வந்த இந்திய திரைப்படத் தொழில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகையால் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது.

படத்தை தயாரித்து திரைக்கு கொண்டுவர முடியாமல் தடுமாறும் சிறு தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை. இந்தியாவின் முன்னணி தியேட்டர் செயின் நெட்வொர்க் நிறுவனமான பிரமிட் சாய்மீரா குழுமம் விநியோகித்த திரைப்படங்களில் பெரும்பாலான திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் சிறுதயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டவை. திரைப்படத் தொழிலில் தயாரிப்பு, விநியோகம் என்று பலநிலைகள் இருந்தாலும் மிக முக்கிய நிலை திரையிடுதல். என்னதான் நல்ல படங்களாக தயாரித்தாலும், நவீன தொழில்நுட்பங்களோடு படங்களை செதுக்கினாலும், திரையிடப்படும் திரையரங்கம் சரியில்லை என்றால், படத்தின் வெற்றிவாய்ப்பு கேள்விக்குறியாகிறது. எனவே தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் தியேட்டர்களை நவீனமாக்கி ரசிகர்களுக்கு வசதியாக சினிமா பார்க்கும் நிலையை ஏற்படுத்த மெனக்கெடுகின்றன.

தியேட்டர்கள் குறித்த சில தகவல்கள் கிறுக்கலாக...

* சென்னை வடபழனியில் அமைந்திருக்கும் கமலா தியேட்டர் புகழ்பெற்றது. இத்திரையரங்கில் திரையிடப்படும் படங்கள் பெரும்பாலானவை பெரிய நடிகர்கள் நடித்தவை. மிக விரைவில் இன்னொரு திரை அமைத்து காம்ப்ளக்ஸ் ஆக மாற்றப் போகிறார்கள்.

* சென்னை புரசைவாக்கம் ஈகா தியேட்டர் காம்ப்ளக்ஸில் பிறமொழித் திரைப்படங்கள் அதிகமாக திரையிடப்படும். குறிப்பாக இந்தி, மலையாள திரைப்படங்கள் அதிகமாக இங்கே திரையிடப்படுவதை காணலாம். இந்த காம்ப்ளக்ஸ் மல்டிபிளக்ஸாக அதிவிரைவில் மாற்றம் பெறப்போகிறது.

* சென்னைக்கு அருகே இருக்கும் வில்லிவாக்கம் ராயல் தியேட்டர் பழமையானது. இந்த தியேட்டர் இடிக்கப்பட்டு மல்டிபிளக்ஸாக உருமாறப் போகிறது.

* ஏ.வி.எம். நிறுவனத்துக்கு சொந்தமான தியேட்டர் ஏ.வி.எம்.ராஜேஸ்வரி. இத்திரையரங்கத்தை இடித்து மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் கட்ட ஏ.வி.எம். நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

* வாஹினி ஸ்டுடியோவுக்கு உள்ளே மல்டிடீலக்ஸ் தியேட்டர் அமைக்க கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.

* திருநெல்வேலி-கன்னியாகுமரி விநியோக ஏரியாவில் அனைத்து வசதிகளும் கொண்ட திரையரங்கம் ஒன்றே ஒன்று மட்டுமே இருக்கிறது. அது திருநெல்வேலியின் பாம்பே தியேட்டர்.

* 2010ஆம் ஆண்டுக்குள் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதியில் புதியதாக 150 ஸ்க்ரீன் தொடங்கப்பட இருக்கிறது.

* தமிழ்நாட்டிலேயே மக்களுக்கு பாதுகாப்பில்லாத திரையரங்குகள் மிக அதிகமாக இருப்பது சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலுமே.

* இந்தியாவில் தோராயமாக பதிமூன்றாயிரம் திரையரங்குகள் இருக்கிறது.

* ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆட்லேப்ஸ் வசம் 69 ஸ்க்ரீன் கொண்ட 19 மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இருக்கிறது.

* பி.வி.ஆர். சினிமாஸ் வசம் 67 ஸ்க்ரீன் கொண்ட 17 மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இருக்கிறது.

* ஐநாக்ஸ் வசம் 52 ஸ்க்ரீன் கொண்ட 14 மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உண்டு.

* 39 ஸ்க்ரீன் கொண்ட 13 மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை சினிமேக்ஸ் நடத்தி வருகிறது. இதே எண்ணிக்கையில் ஸ்ரீகார் சினிமாஸும் தியேட்டர்களை நடத்தி வருகிறது.

* இந்தியாவில் அதிகபட்ச தியேட்டர்களை கைவசம் வைத்திருக்கும் நிறுவனம் பிரமிட் சாய்மீரா குழுமம். இந்நிறுவனம் 44 மல்டிபிளக்ஸ்கள் கொண்ட 703 திரைகளை இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா நாடுகளில் நடத்திவருகிறது. 2010ஆம் ஆண்டுக்குள் இந்நிறுவனத்தின் வசம் 175 மல்டிபிளக்ஸ்களும், 2000 ஸ்க்ரீன்களும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.