Thursday, January 3, 2008

”தமிழ் சினிமா 2007” - திரும்பிப் பார்ப்போமா?

புதியதாக 2008 பிறந்திருக்கிறது. நம்பிக்கைகளோடு இந்த ஆண்டை வரவேற்கும் வேளையில் கடந்த ஆண்டான 2007ஐ திரும்பிப் பார்க்கும்போது தமிழ் திரையுலகுக்கு அதிர்ஷ்டம் தரும் ஆண்டாகவே கருதவேண்டியிருக்கிறது. சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் நல்ல வருவாயை தந்த ஆண்டு அது. கார்ப்பரேட் நிறுவனங்கள் திரைத்தொழிலில் கவனம் செலுத்துவதால் இத்தொழிலின் தரம் கூடியிருக்கிறது, புதுமையான வியாபார நுணுக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

2007ஆம் ஆண்டில் திரையுலகின் மொத்த கவனத்தையும் கபளீகரம் செய்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பாரம்பரிய திரைத்தொழில் நிறுவனமான ஏ.வி.எம், பிரம்மாண்ட தமிழ் திரைப்படங்கள் உருவாக்குவதில் முன்னோடி இயக்குனராக விளங்கும் ஷங்கர் இவர்களோடு இணைந்து சூப்பர் ஸ்டார் நடித்த சிவாஜி படைத்த சாதனைகள் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பாகுபாடின்றி உலகின் எல்லா 'வுட்டுகளையும்' கோலிவுட்டை நோக்கி ஆச்சரியத்துடன் பார்க்க வைத்தது.


அசத்திய அறிமுகங்கள்!

சென்ற ஆண்டு நடிப்புக்கு அறிமுகமான சிலர் ஆரம்பப் படத்திலேயே அசத்தியிருக்கிறார்கள். நடிகர் சிவக்குமாரின் இளையமகனும், சூர்யாவின் தம்பியுமான 'கார்த்தி' தான் நடித்த முதல் படத்திலேயே நூறாவது படத்தில் காட்டக்கூடிய திறமையைக் காட்டியிருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜியின் பராசக்திக்கு பிறகு அறிமுகப்படத்திலேயே பெரிதும் கவனிக்கப்பட்டவர் என்று திரைவிமர்சகர்களால் புகழாரம் சூட்டப்பட்டார்.

அமரர் ஜீவா இயக்கி வெளிவந்த கடைசிப்படமான 'உன்னாலே உன்னாலே' பெரும் வெற்றி பெற்றது. விளம்பரமாடலாக வெற்றிகரமாக வலம் வந்த வினய் இப்படத்தின் மூலமாக ஏராளமான ரசிகைகளின் இதயங்களில் பட்டாம்பூச்சி பறக்க வைத்திருக்கிறார். ஆண்டின் கடைசியில் வெளிவந்த இயக்குனர் பாலாஜி சக்திவேலின் 'கல்லூரி'யில் அறிமுகமாகியிருக்கும் அகிலும் குறிப்பிடத்தக்கவர்.


சிவாஜி - பேரைக் கேட்டதுமே 2007 அதிருச்சில்ல...!

இந்த வருடத்தின் மொத்த கவனத்தையும் ‘சிவாஜி' குத்தகைக்கு எடுத்துக் கொண்டார். சுமார் 850 பிரிண்டுகள் போடப்பட்டு உலகெங்கும் வெளியான சிவாஜி மொழி பாகுபாடில்லாமல் உலகமக்கள் எல்லோரையும் கவர்ந்தார். UK TOP 10ல் இடம்பெற்ற முதல் தமிழ் திரைப்படம் போன்ற மைல்கல்லை எட்டிய சிவாஜியின் சாதனைகளை சொல்லிக்கொண்டே போனால் ஒரு என்சைக்ளோபீடியா போடவேண்டியதிருக்கும். உலகளவில் தமிழ் திரைப்படங்களை திரையிடுவதற்கான அருமையான சாத்தியக்கூறின் தொடக்கத்தை சிவாஜி ஏற்படுத்தியிருக்கிறார்.


நம்பிக்கை தந்த திரைக்காவியங்கள்!

மரத்தை சுற்றி டூயட் பாட்டு, ஆலமரத்தடியின் கீழ் எச்சில் சொம்புடன் பஞ்சாயத்து, இருநூறு வில்லன்களை சூறாவளியாக ஒரே ஆளாக பந்தாடும் கதாநாயகன் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி புதிய சிந்தனைகளோடு, மக்களின் வாழ்க்கை யதார்த்தத்துக்கு மிக நெருங்கி வந்து கதை சொல்லிய படங்கள் 2007ல் வெளிவந்தது.

ராதாமோகன் இயக்கிய மொழி, வெங்கட்பிரபு இயக்கிய சென்னை-600028, அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்' தங்கர்பச்சான் இயக்கிய 'பள்ளிக்கூடம்' மற்றும் ‘ஒன்பது ரூபாய் நோட்டு', வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்', பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி' போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. இத்திரைப்படங்கள் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது மக்களின் ரசனைக்கு கிடைத்த வெற்றியாக கொள்ளலாம்.


கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிகப்புக் கம்பளம்!

இவ்வாண்டு தான் உண்மையிலேயே திரைத்தொழில் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டு பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழில் திரைப்படம் தயாரிக்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரமிட் சாய்மீரா, ஆட்லேப்ஸ், யூடிவி, ஜீவி பிலிம்ஸ், மிட்வேலி கார்ப்பரேஷன், மோசர்பேர், வர்மா கார்ப்பரேஷன், ஐங்கரன் இண்டர்நேஷனல் போன்ற சர்வதேச நிறுவனங்கள் திரைத்தொழிலில் காலடி எடுத்துவைத்து தமிழ் சினிமாவை உலகளாவிய வணிகத் தடத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

இந்நிறுவனங்களால் தமிழ் திரைப்படங்களின் வணிகம் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. முன்பு போல இல்லாமல் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டத்தின் கிழக்கு நாடுகள் போன்று தமிழ் சினிமா காலடி எடுத்து வைக்காத இடத்துக்கெல்லாம் இந்நிறுவனங்கள் தடம் பதித்து வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்கள். புதிய வியாபார நுணுக்கங்கள், விளம்பர யுக்தி, தரமான படங்கள் தயாரிக்க தாராளச் செலவு, திரையரங்குகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்றவை கார்ப்பரேட் நிறுவனங்களால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கிடைக்கும் நேரடி நன்மை.

நூற்றுக்கணக்கான தியேட்டர்களை தன்வசம் வைத்திருக்கும் பிரமிட் சாய்மீரா போன்ற நிறுவனங்கள் படங்களை தயாரித்து வெளியிட முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் சிறு தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார உதவி, விளம்பர உதவி என்று சகலரீதிகளிலும் உதவி வருவதால் தமிழ் திரையுலகின் பயணம் ஆரோக்கியமான பாதையில் நடைபோட ஆரம்பித்திருக்கிறது.


புரட்சியை ஏற்படுத்திய கேளிக்கைவரிச் சலுகை!

தமிழில் பெயர் வைக்கப்படும் தமிழ்ப்படங்களுக்கு கேளிக்கைவரி இல்லை என்று மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அறிவித்திருப்பதால் பல ஆண்டுகளாய் மூச்சு முட்டிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்கு தாராளமாக இந்த ஆண்டு ஆக்ஸிஜன் கிடைத்தது. இதன் மூலமாக தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை தரமாக தாராளமாக செலவு செய்து நம்பிக்கையோடு வெளியிட முடிகிறது. வணிகலாபமும் அதிகரித்திருக்கிறது. இந்த ஆரோக்கியமான போக்கினை பயன்படுத்தி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இனி தரமான படங்களை அதிகமாக தருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


ஒற்றை ரீல் இயக்கம்!

நல்ல கருத்துக்களையும், சிந்தனைகளையும் மக்களிடம் மிக எளிதாக எடுத்துச் செல்லும் ஊடகமாக சினிமா விளங்குகிறது. தங்களை அடையாளப் படுத்தி காட்ட முடியாமல் அவதியுறும் புதிய திறமையாளர்களை அடையாளம் காட்ட பிரமிட் சாய்மீரா மற்றும் கலாச்சார அமைப்பான ஞானபானு இணைந்து திரையரங்குகளில் ஒரு ரீல் அளவிலான தரமான ஆவணப் படங்களை காட்ட ஒற்றைரீல் இயக்கத்தை தோற்றுவித்திருக்கிறது. இந்த இயக்கத்தால் தயாரிக்கப்படும் ஆவணப்படங்கள் திரையரங்குகளில் திரைப்படம் காட்டப்படுவதற்கு முன்னால் மக்களுக்கு காட்டப்படும். இதன் மூலம் நல்ல சிந்தனைகளையும், செய்திகளையும் மக்களிடையே உடனுக்குடன் கொண்டுச்செல்ல முடியும் என்பது உறுதி.


ரீமிக்ஸ் கலாட்டா!

பழைய படங்களில் ஹிட் ஆன பாடல்களை மீண்டும் ரீமிக்ஸ் செய்து வழங்கும் கலாச்சாரம் இந்த ஆண்டு கொடிகட்டி பறந்தது. எங்கேயும் எப்போதும் (ஜி.வி.பிரகாஷ்), பொன்மகள் வந்தாள் (ஏ.ஆர்.ரஹ்மான்), மை நேம் இஸ் பில்லா, அன்று வந்ததும் அதே நிலா (யுவன்ஷங்கர் ராஜா), சொர்க்கம் மதுவிலே (கார்த்திக் ராஜா), என்னடி முனியம்மா, நான் யார் நீ யார் (இமான்) என்று பல சூப்பர் ஹிட் பாடல்கள் ரீமிஸ் செய்யப்பட்டு மீண்டும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. ஏற்கனவே மக்களிடையே நன்கு பிரபலமான பாடல்களை இன்றைய தலைமுறையின் ரசனைக்கேற்ப அதிரடி இசை சேர்த்து வழங்குவது நிச்சய ஹிட்டுக்கு உத்தரவாதம் அளிப்பதே இதற்கு காரணம்.


பழைய நெனைப்புடா பேராண்டி!

ஹிட் பாடல்களை ரீமிக்ஸ் செய்து புதியதாக வழங்குவதைப் போல பழைய படங்களை மீண்டும் புதுப்பொலிவுடன், இன்றைய தொழில்நுட்ப சாத்தியங்களை பயன்படுத்தி தயாரிப்பதும் 2007ன் ஒரு முக்கிய நிகழ்வாக எடுத்துக் கொள்ளலாம். இதை பாதுகாப்பான விளையாட்டு என்றும் சொல்லலாம். சில தலைமுறைகளுக்கு முன்பாக அன்றைய ரசிகர்களை கவர்ந்த படங்கள் நிச்சயம் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் இன்றைய ட்ரெண்டில் எடுத்தால் கவரும் என்று ரீமேக் திரைப்படங்களை எடுக்க நினைக்கும் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் நினைக்கிறார்கள்.

ஜெமினி கணேசன் நடித்து கே.பாலச்சந்தர் இயக்கிய 'நான் அவனில்லை' திரைப்படத்தை மீண்டும் ஜீவன் நடிக்க செல்வா இயக்கினார். வணிகரீதியாக இந்தப் படம் வெற்றி பெற்றது. இதைப் போலவே சூப்பர்ஸ்டாரின் பில்லா மீண்டும் அஜித்குமார் நடிக்க விஷ்ணுவர்த்தனால் இயக்கப்பட்டு சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இரு படங்களின் அதிரடி வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவுக்கு “ரீமேக் காய்ச்சல்” பிடித்திருக்கிறது.

கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன் 'மீண்டும் கல்யாணராமன்' என்ற பெயரில் ராகவேந்திராலாரன்ஸை கதாநாயகனாக கொண்டு இயக்கப்படப் போகிறது. சூப்பர் ஸ்டாரின் தீ மற்றும் முரட்டுக்காளை படங்களையும் தூசு தட்டி இயக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.


சென்ற ஆண்டு திரைநிகழ்வுகளை பகிர்ந்துகொள்ள இன்னமும் ஏராள தகவல்கள் உண்டு. பிறிதொரு சந்திப்பில் பகிர்வோம். மொத்தத்தில் 2007 தமிழ் திரையுலகுக்கு ஒரு முன்னேற்றமான பாதையை அமைத்துத் தந்திருக்கும் ஆண்டு என்றே தெரிகிறது. 2008ன் தொடக்கத்திலேயே மீண்டும் பழைய தயாரிப்பாளர்களுக்கு பாதை அமைத்துத் தரும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. இவ்வாண்டு 2007ஐ விட சிறந்ததாக அனைவருக்கும் அமைய வாழ்த்துகள்!

0 comments: