Monday, January 21, 2008

ஆச்சி மனோரமா - கலையுலக பொன்விழா!


1500 படங்கள் - நூறுக்கும் மேற்பட்ட முறை நாடகத்துக்காக மேடையேறியவர் - நிறைய தொலைக்காட்சி தொடர்கள் - ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை - ஒரே ஒரு நடிகைக்கு மட்டுமே உலகளவில் இந்த சாதனை சாத்தியமாகியிருக்கிறது. அவர் ஆச்சி மனோரமா!

நாடக மேடைகளில் தன் கலைவாழ்க்கையை தொடங்கிய மனோரமா 1958ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் தயாரித்த மங்கையர்க்கரசி திரைப்படம் மூலமாக தன் திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். இவ்வாண்டு அவரது கலையுலக வாழ்க்கைக்கு பொன்விழா ஆண்டு. தமிழ்த் திரையுலகை பொறுத்தவரை கலையுலகப் பொன்விழா கொண்டாடியவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கிறார்கள். ஐம்பது ஆண்டுகள் கழித்தும் கூட இன்னமும் திரைத்துறையில் துடிப்பாக இயங்கிவருகிறார் ஆச்சி. ஐந்து முதல்வர்களுடன் மேடைகளிலும், திரைப்படங்களிலும் நடித்த ஒரே நடிகை இவராகத் தான் இருக்க முடியும்.

அதிக படங்கள் நடித்ததற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் மனோரமாவின் பெயர் 1985ல் இடம்பெற்றது. புதியபாதை திரைப்படத்தில் நடித்தபோது தேசிய விருது பெற்றார். 2002ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் கொடுத்து கவுரவிக்கப்பட்டார்.

இவரது ஐம்பதாண்டு சாதனைகளைப் பாராட்டி கடந்த வாரம் முதல்வர் தலைமையில் ஆச்சிக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. திரையுலகமே திரண்டு வந்து பாராட்டியது என்று சொன்னால் மிகையில்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு, ஸ்ரீப்ரியா, குஷ்பு, பார்த்திபன், ஒய்.ஜி.மகேந்திரன், விவேக், மீனா, மும்தாஜ், ப்ரியாமணி, நமீதா, தேஜாஸ்ரீ, சங்கீதா மற்றும் இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், இராம.நாராயணன், எஸ்.ஏ.சந்திரசேகர், எல்.சுரேஷ், பி.வாசு, தேவா மற்றும் திரையுலகினர் திரளாக கலந்துகொண்டு மனோரமாவை பாராட்டினர்.

தமிழக முதல்வர் கலைஞர் பேசும்போது 'உதயசூரியன்' என்ற பெயரில் தான் எழுதி, நடித்த மேடைநாடகம் ஒன்றில் மனோரமா தனக்கு ஜோடியாக நடித்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்துகொண்டார். 1967ல் ஒரு கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது மனோரமாவும், அவரது தாயாரும் தன்னை கவனித்துக் கொண்டது குறித்து மனோரமாவுக்கு நினைவுறுத்தினார்.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஏற்புரை ஆற்றிய மனோரமா தன்னுடைய ஐம்பதாண்டு கால கலையுலக வாழ்க்கைக்கான பெருமைகள் தன் தாய்க்கும், கலைஞருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும், எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்குமே சேரும் என்று தழுதழுத்தபடி கூறினார்.

1 comments:

  1. said...

    ஆச்சின்னா... ஆச்சிதான்.. ஆச்சி பிறந்த 630107 இலிருந்து ....

    TamilNenjam