Wednesday, January 2, 2008

சுட்டபழமாக மீண்டும் ‘மைக்' மோகன்!

வெள்ளிவிழா நாயகனாக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் நடிகர் மோகன். இவர் நடித்த பல படங்கள் வெள்ளிவிழா கண்டாதால் ‘வெள்ளிவிழா நாயகன்' என்று பெயர் பெற்றார். பெரும்பாலான படங்களில் பாடகராக நடித்து கையில் மைக் வைத்துக் கொண்டு உயிரை கொடுத்துப் பாடுவார் என்பதால் இவரை மைக் மோகன் என்றும் அழைப்பார்கள்.

ஒருமுறை நடிகர் கமல்ஹாசன் பேட்டியில் நகைச்சுவையாக சொல்லியிருந்தார். “அக்காலக் கட்டத்தில் ஒரு நடிகர் மைக்கை கையில் எடுத்துவிட்டால் அடுத்தடுத்த படங்களிலும் மைக்கை கையில் கொடுத்துவிடுவார்கள். அதுபோலவே நான் நடித்த பல படங்களில் மேடையில் மைக்கை வைத்துக் கொண்டு பாடிக் கொண்டிருந்தேன். நல்லவேளையாக மோகன் வந்து என் மைக்கை பிடுங்கிக் கொண்டார்”

பாடகராக மைக் வைத்து நடிகர் மோகன் பாடிய (நடித்த) பாடல்களும், படங்களும் சூப்பர்ஹிட் ஆனது. மோகனுக்கு பிறகு நடிகர் முரளி பல படங்களில் மைக் வைத்துப் பாடினார். 90களுக்குப் பிறகு நிறைய மிகக்குறைவான படங்களிலேயே மோகன் நடித்தார். கடைசியாக அவர் நடித்து வெளிவந்த திரைப்படம் “அன்புள்ள காதலிக்கு”

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மோகன் “சுட்டப்பழம்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ஜி.கே.வாசன் இயக்கும் இத்திரைப்படத்துக்கு ஸ்ரீசாம் இசையமைக்கிறார். இது ஒரு த்ரில்லர் படமாம்.

'நிறைய பெண்கள் கற்பழித்து கொல்லப்படுகிறார்கள். ஓட்டல் ஒன்றினை நடத்திவரும் முதலாளியான மோகன் மீது காவல்துறைக்கு சந்தேகம். உண்மையை அறிய பெண் காவல் அதிகாரி ஒருவர் மோகனுடன் நெருக்கமாக பழகுகிறார். அந்த அதிகாரியிடமிருந்து மோகன் விலகிச் செல்ல முயற்சிக்க சந்தேகம் வலுவாகிறது. முடிவில் உண்மை குற்றவாளி பிடிபடுகிறாரா?' என்பதே கதையாம். மோகன் மைக் வைத்து மேடையில் பாடும் காட்சி ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை.










0 comments: