Tuesday, January 22, 2008

மைடியர் குட்டிச்சாத்தான் - மலரும் நினைவுகள்!

இசைஞானி இசையில், வாணிஜெயராம் குரலில் “செல்லக்குழந்தைகளே!” பாட்டு நினைவிருக்கிறதா? இந்தியாவின் முதல் முப்பரிமாண (3டி) திரைப்படமான மைடியர் குட்டிச்சாத்தான் வெளிவந்து கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் ஆகிறது. தயாரிப்பாளர் அப்பச்சனின் மகனான ஜிஜோ அமெரிக்காவில் திரைப்பட தொழில்நுட்பம் குறித்து படித்து முடித்து வந்தவுடனேயே மலையாளத்தில் இயக்கிய படம் அது. படத்தை இயக்கும்போது அவருக்கு வயது 21.

ஒரு குட்டிச்சாத்தான் சில குழந்தைகளோடு கூடி விளையாடி, சாகசங்கள் செய்வதைப் போல திரைக்கதை ஜாலியாக அமைக்கப்பட்டிருந்தது. 3டி படம் என்பதால் காட்சிகள் திரையை விட்டு வெளியே வருவது போல தெரியும். திரையில் ஐஸ்க்ரீமை நீட்டும்போது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் ஐஸ்க்ரீமுக்காக கையை நீட்டுவார்கள். அதுபோலவே நெருப்பு வரும்போது குழந்தைகள், பெரியவர்கள் பாகுபாடில்லாமல் எல்லோருமே அலறுவார்கள்.

இப்படத்தை அப்போது ரசித்துப் பார்த்த குழந்தைகள் எல்லோருமே இப்போது இளைஞர்களாகவும், நடுத்தர வயதினராகவும் மாறிவிட்டிருப்பார்கள். இவர்கள் எல்லாரும் மீள்நினைவு செய்து பார்க்கும் வகையில் படத்தை தமிழில் வெளியிட்ட திரைத்துறை சாதனையாளர் கேயார் தினத்தந்தியில் வரலாற்றுச் சுவடுகள் பகுதியில், படத்தை வெளியிட்டபோது ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து சுவையாக எழுதி வருகிறார். அவற்றில் சில துளிகள் :

“அப்பச்சனின் நவோதயா நிறுவனம் ஜிஜோ இயக்கத்தில் மலையாளத்தில் தயாரித்த ‘குட்டிச்சாத்தான்' படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. அது ஒரு 3டி படம். கண்ணாடி போட்டுக் கொண்டு படம் பார்க்க வேண்டும். அந்த தொழில் நுட்பம் நமக்குப் புதியது. இந்த 3டி எனப்படும் முப்பணிமாணத் தொழில் நுட்பம் பற்றிய அடிப்படையான விஷயங்கள் எனக்குத் தெரியும்.

நான் திரைப்படக் கல்லூரியில் படித்தது பிலிம் பிராசஸிங் படிப்பு. எனவே எனக்கு 3டி பற்றி கூடுதலாகவே அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

குட்டிச்சாத்தான் கேரளாவில் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அதை வாங்கி தமிழில் டப் செய்ய பலர் விரும்பினார்கள். ஆனாலும் அதன் தயாரிப்பாளர் மிகப்பெரிய விலையை சொல்லிக்கொண்டு இருந்தார். போட்டி அதிகரிக்கவே அவர் விலையைக் கூட்டிக்கொண்டே இருந்தார். அதை வாங்குவதற்கு இளையராஜா, பாலாஜி, ஜீவி போன்றவர்கள் முயற்சி செய்தார்கள். விலை ஏறிக்கொண்டே போனதால் சற்று தயங்கினார்கள்.

இந்த நிலையில் அதன் தயாரிப்பாளர் அப்பச்சனை அணுகினேன். சந்தித்தபின் அதை வாங்குவதென்று துணிச்சலாக முடிவு செய்தேன். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யும் உரிமையை நான் வாங்கினேன். எவ்வளவு விலை தெரியுமா?

ஒரு கோடியே பதினைந்து லட்சம் ரூபாய்! அப்போது ரஜினி படத்தின் தமிழ்நாட்டு வியாபாரமே நாற்பது முதல் ஐம்பது லட்சம் தான். டப்பிங் பட வியாபாரத்தின் விலை ஒரு லட்சம் தான். ரஜினி படத்தை விட கூடுதலாக கொடுத்து ஒரு டப்பிங் படத்தை வாங்குகிறாரே என்று பலருக்கு ஆச்சரியம் - அதிர்ச்சி!!

முதலில் இந்திரா தியேட்டரை வாங்கிய நான், பிறகு பல தியேட்டர்களை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தேன். அப்படி என் கட்டுப்பாட்டில் இருந்த சத்யம் தியேட்டரில் தான் “மைடியர் குட்டிச்சாத்தான்” படத்தை வெளியிட்டேன்.

“3டி” தொழில்நுட்பம் அப்போது தியேட்டர்களுக்கும் புதிது. எனவே, திரையிடும் விஷயத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அவ்வளவுதான். பெரிய இழப்பை சந்திக்க வேண்டியிருந்திருக்கும். இருந்தாலும் தைரியமாகவே இந்த விஷயத்தில் இறங்கினேன். முதலில் சத்யம் தியேட்டர், பிறகு ஈகா, சில நாட்களில் தமிழ்நாடெங்கும் திரையிட்டேன். 1984 தீபாவளிக்கு இப்படம் வெளியானது.

இருப்பினும் எதிர்பாராத சோதனைகள் ஏற்பட்டது. படம் வெளியான நான்கு நாட்களில் இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அதனால் நாடெங்கும் கலவரம் மூண்டது. தமிழ்நாட்டிலும் பல தியேட்டர்கள் சேதப்படுத்தப்பட்டன. அது என் படவெற்றியை பாதித்தது. பிறகு சமாளித்து வேகமெடுத்தது.

10வது நாள் இன்னொரு பிரச்சினை. அப்போது சென்னையெங்கும் ‘மெட்ராஞ் ஐ' எனப்படும் கண் நோய் பரவியது. ‘3டி' படம் என்பதால் கண்ணாடி போட்டுக் கொண்டுதான் படம் பார்க்க வேண்டும். அப்படி நாங்கள் தியேட்டரில் கொடுத்த கண்ணாடி மூலம்தான் இந்த நோய் வருகிறது என்று சிலர் பிரசாரம் செய்தார்கள்! நான் கவலைப்படவில்லை. எல்லா தியேட்டர்களிலும் கிருமிகள் பரவாமல் தடுக்க கண்ணாடிகளை “ஸ்டெரிலைஸ்” முறையில் சுத்தம் செய்யும் மெஷின் வாங்கிக் கொடுத்தேன். அதனால் எந்தக் கிருமியும் கண்ணாடி மூலம் பரவும் வாய்ப்பில்லை என்று உறுதி செய்யப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தைரியமாக படம் பார்க்க அழைத்து வந்தார்கள்.

மீண்டும் சுறுசுறுப்பான வசூல் தொடங்கியது. முதலில் சென்னைக்கு 3 பிரதிகள் மட்டுமே வெளியிட்டோம். மற்ற மாவட்டங்களுக்கு தலா ஒரு பிரதி. அடுத்த வாரமே 60 பிரதிகள் போடுமளவுக்கு அபார வெற்றியடைந்தது.

“எப்படி கண்ணாடி அணிந்து படம் பார்ப்பது?” என்று ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப், ஜிதேந்திரா ஆகியோர் விளக்கப்படமான “டெமோ”வில் இலவசமாக நடித்துக் கொடுத்தார்கள். குழந்தைகளுக்கான படம் என்பதால் அரசாங்கம் “மைடியர் குட்டிச்சாத்தானுக்கு” வரிச்சலுகையும் அளித்திருந்தது”

இவ்வாறாக கேயார் தினத்தந்தியில் எழுதியிருக்கிறார்.

3 comments:

  1. Anonymous said...

    எனக்கு ஆறு / ஏழு வயதாக இருக்கும்போது விழுப்புரத்தில் இந்த படத்தை பார்த்தேன்...படத்தை பார்த்து சில ஆண்டுகள் வரை நினைவில் நீங்காமல் இருந்தது...

    பிறகு ரீ.ரிலீஸ் ஆகி மீண்டும் வந்ததாக நியாபகம்...என்னுடைய கல்லூரிக்காலங்களில்..திருச்சியில்...

    அப்போது "அலெக்ஸாண்ட்ரா" பார்க்கும் மூடில் இருந்ததால் மை-டியர் குட்டிச்சாத்தான் போகவில்லை...

    இருந்தாலும் இது போன்ற ஒரு புதுமையான முயற்சியை ( Innovation) எடுத்த அப்பச்சன்-சன் பாராட்டுக்குரியவர்...அதன் வெற்றியை சரியாக கணித்த கேயார் சிறப்பான பிஸினஸ்மேன்...

    ஸ்கூல் லீவ் விடுற மே-மாசம் ரிலீஸ் ஆகுறமாதிரி எந்த 3-D படம் வந்தாலும் அது இன்னைக்கும் சூப்பர் ஹிட்டு என்றுதான் தோன்றுகிறது....

  2. Anonymous said...

    திருச்சி சிப்பி தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன். கடலலை போல் மக்கள் திரண்ட நாட்கள் அவை - மறக்க முடியாத நினைவுகள்.

  3. said...

    மறக்கமுடியாத அனுபவம்