Tuesday, January 22, 2008

நமீதா இட்லி ரெடி!



பொருட்களை விற்பதற்காக திரையில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் பெயரில் பிராண்டிங் செய்யப்படுவது உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பாக நதியா கம்மல், நதியா வளையல் என்று கூறி கம்மல், வளையல் வகையறாக்களை விற்றார்கள். அதன்பின்னர் கவுதமி தாவணி, கவுதமி மிடி, கவுதமி ஸ்டப்ஸ் என்று சொல்லி விற்கப்பட்டது. பிரபலமான படங்களின் பெயர்களில் துணிவகைகள் விற்பனை செய்யப்படுவது மிகப்பெரிய கடைகளில் கூட வழக்கமானதுதான்.

குஷ்பு தமிழ் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தபோது அவரது பெயர் சொல்லி பல பொருட்கள் விற்கப்பட்டது. முதன்முதலாக காஞ்சிபுரத்தில் ஒரு ஹோட்டலில் 'குஷ்பு இட்லி' என்று அறிமுகப்படுத்தப்பட்டு தமிழகமெங்கும் இட்லிக்கடைகளில் 'குஷ்பு இட்லி' என்று சொல்லப்படுமளவுக்கு இட்லி பிராண்டிங் ஆனது.

அதுபோலவே இப்போது நமீதா மிக பிரபலமாக இருக்கிறார். நமீதா இடம்பெறுவதே படங்களில் இப்போதெல்லாம் கூடுதல் தகுதியாக இருக்கிறது. நமீதா சிறு வேடங்களில் தோன்றும் படங்களை கூட அவரது ரசிகர்கள் விட்டு வைப்பதில்லை. ஒரே ஒரு பாடல்காட்சியில் அவர் இடம்பெற்றாலும் அப்படங்களை பலமுறை அவரது ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

ஹோட்டல்களிலும், கையேந்தி பவன்களிலும் MEALS READY என்றோ, TIFFEN READY என்றோ முகப்பில் போர்டு வைக்கப்பட்டிருக்கும். சில நாட்களாக சென்னையின் கையேந்தி பவன்களில் “நமீதா இட்லி ரெடி” என்று போர்டு வைக்கப்பட்டு வருகிறது.

நமீதா ட்ரெண்டினை நன்கு புரிந்துகொண்ட சென்னையின் கையேந்திபவன் காரர்கள் சிலர் நூதனமான முறையில் “நமீதா இட்லி ரெடி” போர்டு மாட்டி விற்பனையில் பட்டையைக் கிளப்புகிறார்கள். அதே பழைய இட்லி, காரச்சட்டினி, தேங்காய் சட்டினி தான். ஆனாலும் சாதாரண இட்லிக்கு கூட நமீதாவின் நாமகரணம் சூட்டப்படும் கடைகளில் எல்லாம் விற்பனை இரண்டு மடங்காக இருக்கிறதாம். மிக விரைவில் தமிழ்நாடெங்கும் இட்லி நமீதா மயமாகும் என எதிர்பார்க்கலாம்.

2 comments:

  1. said...

    இவ்வளவு நாளா தோசை மட்டுமே சாப்பிட்டுக்கிட்டிருந்த என் மனவி கங்கா இப்போவெல்லாம் நமீதா இட்லி மட்டுமே மூணு வேளையும் சாப்பிட்டுக்கிட்டிருக்கா.

    என்ன கொடுமை சரவணன் இது?

    - சந்திரமுகி ‘பிரபு'

  2. Anonymous said...

    வெறும் இட்லிக்கு நமீதா பெயர் வைப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்...இட்லியை கொஞ்சம் பெரிசாக போடுமாறு சம்பந்தப்பட்ட கையேந்திபவன்களை நேரில் வற்புறுத்தவும்...