Monday, January 28, 2008

ராம்போ 4 - திரைவிமர்சனம்


1982ஆம் ஆண்டு “First Blood"ல் தொடங்கிய நிம்மதிக்கான தேடல் 2008லும் தொடர்கிறது. சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்து ராம்போ வரிசையில் நான்காவதாக வெளிவந்திருக்கும் திரைப்படம் ஜான்ராம்போ. தமிழிலும் மிக அருமையாக மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ் படங்களுக்கு இணையாக ஏராளமான தமிழக திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

தன் பழைய வாழ்க்கையை மறந்துவிட்டு தாய்லாந்தில் ஒரு சிறுபடகு உரிமையாளராக வாழ்க்கையை தொடர்கிறார் ராம்போ. மியான்மர் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக உதவிகள் செய்ய வரும் மிஷினரி நிறுவனம் ஒன்று, தங்களை மியான்மருக்கு அழைத்துச் செல்ல ராம்போவை கோருகிறார்கள். முதலில் மறுக்கும் ராம்போ பின்னர் அக்குழுவிலிருக்கும் ஒரு பெண்ணின் அன்புக்கு கட்டுப்பட்டு சம்மதிக்கிறார்.

பல தடைகளை தாண்டி மியான்மருக்கு அக்குழுவை அழைத்துச் சென்று விட்டு தாய்லாந்து திரும்பிவிடுகிறார் ராம்போ. இடையில் மியான்மருக்கு சென்ற மிஷினரிகளை அந்நாட்டு இராணுவம் பிடித்து வைத்து சித்திரவதை செய்கிறது. ஏற்கனவே அக்குழுவினரை மியான்மருக்கு அழைத்துச் சென்ற ராம்போவின் துணையோடு அமெரிக்க இராணுவத்தின் ஒரு குழு அவர்களை மீட்க புறப்படுகிறது. இராணுவத்திடமிருந்து மிஷினரி குழுவினரை மீட்க முடிந்ததா என்பதே க்ளைமேக்ஸ்.

படத்தின் ஆரம்பத்தில் மியான்மரில் காட்டப்பட்டும் உள்நாட்டுப் போர் குறித்த சண்டைக்காட்சிகளை நமக்கு அருகில் இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடிகிறது. அதற்கு வாகாக மொழிமாற்றம் செய்தவர்களும் மியான்மர் போராளிகள் ஈழத்தமிழ் பேசுவதாக காட்டியிருப்பது நல்ல கற்பனை. தமிழில் டப் செய்திருப்பதாலோ என்னவோ ஸ்டாலோனும் கூட பஞ்ச் டயலாக் பேசுகிறார். “உனக்காவது உயிரோடு திரும்ப வேண்டுமென்ற ஒரு நோக்கம் இருக்கு. எனக்கு அது கூட கிடையாது” என்று ஸ்டாலோன் பேசும்போது விசில் பறக்கிறது. அதுபோலவே கிர்க்கெட் வீரர் மெக்ராத் போலிருக்கும் இராணுவவீரர் ஒருவர் ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்' என்று எம்.ஜி.ஆர் பாட்டு பாடுவதும் கலக்கல்.

இடைவேளை வரை கிழக்காசிய நாடுகளின் ஆற்றோர ரம்மியத்தை படம்பிடிக்கும் கேமிரா இடைவேளைக்கு பிறகு போர்க்காட்சிகளையும், இரத்தத்தையும் மட்டுமே தத்ரூபமாக படம் பிடிக்கிறது. பின்னணி இசை இயல்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. மழை பெய்யும்போது தியேட்டரில் மழை பொழிவதை போல உணரலாம். குண்டுமழை பொழியும்போதும் கூட அரங்கிலேயே துப்பாக்கிச்சூடு நடப்பதுபோல உணரமுடிகிறது.

62 வயதாகும் ஸ்டாலோன் பிரம்மாண்டமாக இருக்கிறார். முகத்தில் இருக்கும் தசைகள் கூட டைட்டாகவே இருக்கிறது. கைகள் இரண்டும் இரும்புத்தடிகளாகவும், கால்கள் இரண்டு தூண்களைப் போலவும் கச்சிதமாகவே இருக்கிறது. க்ளைமேக்சுக்கு பிறகு மீண்டும் தன் சொந்த ஊரான அரிசோனாவுக்கு ராம்போ வருவதைப் போல காட்டியிருக்கிறார்கள். அனேகமாக ஐந்தாவது பாகம் அமெரிக்காவில் நடப்பதைப் போல எடுக்கப்படலாம். கடந்த 25 ஆண்டுகளில் நான்கு ராம்போ படங்கள் வெளிவந்திருக்கிறது. அடுத்தப் படம் எப்போது வருமோ என்ற ஆவல் நமக்கு எழும்படியாக ஜான்ராம்போ எடுக்கப்பட்டிருக்கிறது.

1 comments:

  1. said...

    ஸ்டொல்லோனுக்கு 62 வயது என்று நம்பவே முடியாத தகவலாக சொல்கிறீர்...ஒரு இளைஞனுக்குரிய உடற்கட்டோடு இருக்கிறார்.....