Monday, January 14, 2008

பொங்கல் ரிலீஸ் - புதுப்படங்கள்!

தமிழ் திரையுலகை பொறுத்தவரை படவெளியீட்டுக்கு ஏற்ற மூன்று நாட்களாக தீபாவளி, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு நாட்களை சொல்லலாம். இந்நாட்களில் வெளியிடப்படும் படங்கள் வசூல்ரீதியாக வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உண்டு. முன்பெல்லாம் இந்நாட்களில் ரஜினி, கமல் போன்றோரின் திரைப்படங்கள் நிச்சயமாக வெளியாகி பண்டிகைகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியளிக்கும். ரஜினியின் சிவாஜி சென்ற ஜூன் மாதம் வெளியாகிய நிலையில் அவரது அடுத்த படத்துக்கே இன்னமும் பூஜை போடவில்லை. கமலின் தசாவதாரம் பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டு, இன்னமும் முழுமையாக தயாரிப்பு முடியாத நிலையில் தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளிவரும் என்று நம்பப்படுகிறது.

ரஜினி, கமல் இருவரும் இல்லாவிட்டாலும் கூட விக்ரம், சிம்பு, மாதவன், வடிவேலு, பரத், சேரன் என்று வண்ணமயமான நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வகை வகையாக ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ள வெளியாகிறது. வெளியாகும் திரைப்படங்கள் என்ன என்னவென்று பார்ப்போமா?

வாழ்த்துகள்!
தம்பி படத்தின் வெற்றிக்கூட்டணியான மாதவன் - சீமான், ஆர்யா படத்தின் வெற்றி ஜோடியான மாதவன் - பாவனா மீண்டும் இணையும் படம் வாழ்த்துகள். நவீன ஓவியர் ட்ராஸ்கி மருது, கூத்துப்பட்டறையின் நிறுவனர்களில் ஒருவரான நா.முத்துசாமி, நடிகர் பிருத்விராஜின் தாயார் மல்லிகா சுகுமாரன் என்று இதுவரை திரையில் காட்டப்படாத திறமைசாலிகளை வாழ்த்துகள் அறிமுகப்படுத்துகிறது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா மற்றும் பிரமிட் சாய்மீரா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. குடும்பத்தோடு காணவேண்டிய தரமான திரைப்படம்!


பீமா!
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த அதிரடித் திரைப்படம். 2006 தீபாவளிக்கு வெளியான மஜா திரைப்படத்துக்கு பிறகு விக்ரமை வெள்ளித்திரையில் காணமுடியாததால் பெரிய எதிர்பார்ப்பை பீமா ஏற்படுத்தியிருக்கிறது. அதுபோலவே சண்டைக்கோழி திரைப்படத்தின் அதிரடி வெற்றிக்குப் பிறகு நீண்ட இடைவெளியில் இயக்குனர் லிங்குசாமி இத்திரைப்படத்தை இயக்கியிருப்பதும் எதிர்ப்பார்ப்புகளை கூட்டியிருக்கிறது. த்ரிஷா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் பாடல்கள் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கனவே செம ஹிட். சூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் வெளிவருகிறார் பீமா. அதிரடி ஆக்சன் ரசிகர்களுக்கு பொங்கல் பிரியாணி!


காளை!
சிம்பு என்றாலே அடிதடியுடன் கூடிய காதல் படங்களை எதிர்பார்ப்போம். ஆனால் ‘காளை'யில் வழக்கமான சிம்புவாக இருக்கமாட்டார், உங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கக்கூடிய வித்தியாசமான சிம்புவை பார்க்கப் போகிறீர்கள் என்கிறார் இயக்குனர் ‘திமிரு' தருண்கோபி. இயக்குனரின் முந்தைய படமான ‘திமிரு' பட்டிதொட்டியெங்கும் சக்கைபோடு போட்ட மசாலா மஞ்சாச்சோறு. இப்படத்தில் மசாலா மட்டுமிருக்காது.. நவசுவையும் இருக்கும் என்கிறார்கள். அஜித்தை வைத்தே படம் தயாரித்து பழக்கப்பட்ட நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி முதன்முறையாக வேறு ஒரு ஹீரோவை வைத்து தயாரித்திருக்கிறார். வளர்ந்துவரும் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் வழக்கம்போல இப்படத்தில் சூப்பர்ஹிட் பாடல்களை தந்திருக்கிறார். வேதிகா, சங்கீதா, வடிவேலு, லால் என்று நட்சத்திர அணிவரிசையும் உண்டு. ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றத்தில் தடைவிதித்ததைப் போல, காளைக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்துவிடுமோ என்று அச்சத்தில் இருந்தார்கள். நல்லவேளையாக முட்டி மோதி பொங்கலுக்கு வெளிவருகிறார் காளை.


பிரிவோம்! சந்திப்போம்!!
வெற்றி, தோல்விகளை கண்டு அதிராமல் தன்னம்பிக்கையோடு படங்களை இயக்கும் தமிழ் இயக்குனர்களில் ஒருவர் கரு. பழனியப்பன். ஸ்ரீகாந்தை இவர் இயக்கிய சதுரங்கம் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. விஷாலை வைத்து எடுத்த சிவப்பதிகாரம் நல்ல படமென்று விமர்சகர்களால் சொல்லப்பட்டும் கூட வணிகரீதியான பெரிய வெற்றியை பெறவில்லை. இப்படிப்பட்ட நிலையிலும் சேரன், ஸ்நேகாவை வைத்து அருமையான குடும்பப் படம் ஒன்றினை இயக்கியிருக்கிறார் பழனியப்பன். கூட்டுக்குடும்பம் என்பது இன்றைய வாழ்க்கையில் சாத்தியமில்லாததாக நகரக தமிழ் குடும்பங்களில் மாறியிருக்கிறது. இப்படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கூட்டுக் குடும்பத்தில் வாழவில்லையே என்ற ஏக்கம் வருமாம். வித்யாசாகரின் இசையில் பாடல்கள் இனிமை. சேரன் - ஸ்நேகா செம ஜோடியென்று ஸ்டில்களை பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்.


பழனி!
திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி என்று நகரங்களின் பெயர் வரிசையில் அடுத்ததாக கமர்ஷியம் பஞ்சாமிர்தம் தரவருகிறார் இயக்குனர் பேரரசு. இயக்குனர் பேரரசுவின் படங்களில் அவர் ஒரு காட்சியிலாவது தோன்றி ஒரு ‘பஞ்ச் டயலாக்' அடிப்பார். ரசிகர்களின் விசில் தூள்பறத்தும். இந்தப் படத்தில் போலிஸ் இன்ஸ்பெக்டராக தோன்றுவது மட்டுமில்லாமல் ‘லோக்கு லோக்கு லோக்கலு' என்ற குத்துப்பாட்டு ஒன்றையும் சொந்தக்குரலில் சுசித்ராவோடு இணைந்து பாடியிருக்கிறார். துரத்தி துரத்தி கதாநாயகிகளை காதலித்துக் கொண்டிருந்த பரத் ‘சீவுறதுக்கு நான் இளநி இல்லடா, பழநி' என்று பஞ்ச் டயலாக் விட்டு ‘சின்னத் தளபதி'யாக மாறியிருக்கிறார். சக்தி சிதம்பரம் தயாரிப்பில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் மசலா பஞ்சாமிர்தமாக வெளிவருகிறது பழநி.


இந்திரலோகத்தில் நா.அழகப்பன்!
வடிவேலு கதாநாயகனாக அறிமுகமான இம்சை அரசன் சரித்திரப் படமென்றால், அடுத்ததாக கதாநாயகனாக நடிக்கும் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் புராணப்படம். மூன்று வேடங்களில் ‘முடியல்ல..' சொல்லவருகிறார் வைகைப்புயல். இந்திரனாகவும், எமதர்மனாகவும், சாதாரண மானிடனாகவும் மூன்று வேடங்களில் மூன்றுவித நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறாராம். ஹாலிவுட் படத்தில் கூட நடித்திருக்கும் ஸ்ரேயா ஒரு பாடலுக்கு வடிவேலுவோடு ஜோடி சேர்ந்து ஆடியிருப்பது பலரின் புருவங்களை உயர்த்தியிருக்கிறது. சபேஷ்முரளி இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்தை மனுநீதி படத்தை இயக்கிய தம்பிராமையா இயக்கியிருக்கிறார். பொங்கலுக்கு தமிழ்நாடு முழுக்க ”டர்ர்ரிரீயல்” தான்!


பிடிச்சிருக்கு!
ஆக்சன், காமெடி, பேமிலி செண்டிமெண்ட், மசலாவென்று மற்றபடங்கள் குத்து குத்துவென்று குத்த மென்மையான காதலை சொல்ல வருகிறது 'பிடிச்சிருக்கு'. இந்த தலைப்பு தான் முதலில் மாதவன் நடித்த ‘ரன்' படத்துக்கு இயக்குனர் லிங்குசாமியால் வைக்கப்பட்டது. லிங்குசாமியின் சிஷ்யரான கனகு தான் இயக்கும் முதல் படத்துக்கு தன் குருநாதர் வைத்த டைட்டிலை வைத்திருக்கிறார். புதுமுகங்கள் நடிக்கும் இப்படம் பொங்கல்ரேஸில் கருப்புக் குதிரையாக முன்னணிக்கு வருமா என்பதை படம் வெளியானபின்பே தீர்மானிக்க முடியும். ‘பிடிச்சிருக்கு' எப்படியிருக்கு என்று கேட்டால் ‘பிடிச்சிருக்கு' என்று ரசிகர்கள் சொல்வார்களா?

2 comments:

  1. said...

    சிறு திருத்தம் : இந்திரலோகத்தில் நா.அழகப்பன் திரைப்படத்தின் வெளியீடு மட்டும் தள்ளிப் போகலாம்.

  2. said...

    //2006 தீபாவளிக்கு வெளியான மஜா திரைப்படத்துக்கு //
    "2005 தீபாவளி" என வந்திருக்க வேண்டுமல்லவா!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்