Saturday, January 12, 2008

நடிகராகும் அரசியல்வாதி!


இந்தியாவில் திரைத்துறையில் பணியாற்றிய நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. தமிழகத்தில் தொடர்ந்து முதல்வராக இருப்பவர்கள் அனைவருமே திரைத்துறையில் சாதனை படைத்தவர்களே. அமெரிக்காவில் கூட அதிபராக இருந்த ரீகன் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக பல ஹாலிவுட் படங்களில் கவுபாய் ஹீரோவாக நடித்தவர் தான். ஆயினும் எப்போதாவது முழுநேர அரசியல்வாதிகளாக இருப்பவர்களும் திரையில் நடிகர்களாக மின்னி பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு.

முன்னாள் தமிழக அமைச்சர் திருநாவுக்கரசு ‘அக்னிப் பார்வை' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்பரசு அவர்களும் சில திரைப்படங்களில் கவுரவ வேடங்களில் நடித்தார். அதுபோலவே இப்போது இளம் அரசியல்வாதியான திருமாவளவனும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் அரசியல்வாதிகள் நடித்து வருவதற்கு உச்சமாக தேசிய அரசியலில் பரபரப்பாக இயங்கிவரும் சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங் ஒரு பெங்காலி மொழி திரைப்படத்தில் நடிக்கப் போவதாக வெளிவந்திருக்கும் செய்தி வட இந்தியாவில் ஆச்சரிய அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.யான ஜெயப்பிரதா இப்போது பெங்காலியில் ஒரு திரைப்படம் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கில் ”ஒசே ராமுலம்மா” என்ற பெயரில் விஜயசாந்தி நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. நக்சல்பாரிகள் பிரச்சினையை தீவிரமாக பேசும் இப்படம் இப்போது பெங்காலியில் ரீமேக் செய்யப்படும் நிலையில், அப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான டிஜிபி கதாபாத்திரத்தில் நடிக்க அமர்சிங் ஒப்புக்கொண்டிருக்கிறார். அமர்சிங்கை தவிர அக்கதாபாத்திரத்தை யார் செய்தாலும் பொருத்தமாக இருக்காது என்று ஜெயப்பிரதா வற்புறுத்தினாராம். அமர்சிங் நடிப்பதால் இத்திரைப்படம் பரபரப்பாக பேசப்படும் என்று தெரிகிறது.

1 comments:

  1. Anonymous said...

    //முன்னாள் தமிழக அமைச்சர் திருநாவுக்கரசு ‘அக்னி தீர்ப்பு' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.//

    அக்னி தீர்ப்பு அல்ல. அக்னி பார்வை.