Wednesday, January 23, 2008

'தமிழ் கேளு! தங்க காசு!!' - வெல்ல 'வாழ்த்துகள்'!

1930களில் பேச ஆரம்பித்த தமிழ் சினிமா 1950கள் வரை கிட்டத்தட்ட முழுக்க முழுக்க தமிழ் தான் பேசியது எனலாம். பாடல்களுக்கும், செந்தமிழ் வசனங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்த நிலை 60களின் ஆரம்பத்தில் மாறியது. சராசரி வாழ்க்கையில் பேசக்கூடிய வசனங்கள் திரையில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் தமிழ் சொற்களுக்கே முக்கியத்துவம் அதிகமாக இருந்தது.

70களில் யதார்த்தப் படங்கள் உருவாக்கப்பட்டபோதே பிறமொழிக் கலப்பு தமிழ் சினிமாவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக புகுந்தது. யதார்த்த வாழ்க்கையில் சராசரி மனிதன் பிறமொழி கலப்போடு பேசுகிறான் என்று அதற்கு நியாயமும் சொல்லப்பட்டது. 80களிலும், 90களிலும் வந்தப் படங்களில் சில பகுதி வசனங்கள் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே வந்தபோதும் கூட அவை மக்களுக்கு பெரிய பொருட்டாக தெரியவில்லை.

ஆயினும் 2000 பிறந்ததுமே படங்களின் தலைப்புகள் கூட ஆங்கிலமயமாகி விட்டது. தமிழ் ஆர்வலர்கள் பலர் ஊடகங்கள் வழியாகவும், களங்களிலும் போராடி ‘தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி சலுகை' என்ற வரத்தை தமிழக அரசிடம் இருந்து போராடி பெற்றார்கள். இவ்வாறாக தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு போராடவேண்டிய நிலை இருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் சீமானின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘வாழ்த்துகள்' திரைப்படம் தமிழார்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் வசனங்கள் முடிந்தவரை பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழிலேயே அமைந்திருக்கிறது. சமீபத்தைய கால்நூற்றாண்டு தமிழ் சினிமாவில் இவ்வளவு தெள்ளத் தெளிவான, முழுமையான தமிழ் படம் வெளிவந்ததில்லை என்ற பாராட்டுக்களை இப்படம் பெற்றிருக்கிறது.

தவிர்க்க முடியாத சில காட்சிகளில் ஒரு சில ஆங்கில வார்த்தைகள் இப்படத்திலும் உண்டு. படம் பார்த்து அந்த வார்த்தைகளை அவதானித்து, அந்த வார்த்தைகளையும் அதன் தமிழாக்கத்தையும் எழுதி அனுப்புபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கக்காசு பரிசளிக்கப் போவதாக 'வாழ்த்துகள்' படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

போட்டியில் கலந்து கொள்பவர்கள் தாங்கள் படம் பார்த்த திரையரங்கின் நுழைவுச் சீட்டினையும் விடையோடு இணைத்து அனுப்பவேண்டிய முகவரி :

வாழ்த்துகள் - தங்க காசு
தபால் பெட்டி எண் 6131
சென்னை - 600 017.

தங்ககாசு உட்பட பல சிறப்புப் பரிசுகளும் உண்டாம். பரிசுகளை வெல்லப் போகிறவர்களுக்கு வாழ்த்துகள்!

1 comments:

  1. said...

    அட, இந்த சினிமா காரங்க நல்லாத்தான் கல்லா கட்டுறாங்க.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ?? சாமி கொடுமைடா..

    ஆங்கிலம் கலந்ததுக்கு.. இப்படி ஒரு போட்டி வெச்சு சப்பைகட்டு.. அட்றா அட்றா...