Tuesday, January 8, 2008

'ரோபோட் ரஜினி' - சில தகவல்கள்!


ஒருவழியாக ஷங்கரின் கனவுப்படமான ‘ரோபோட்' படத்தில் நடிப்பது யாரென்று முடிவாகிவிட்டது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட வேண்டிய படமான 'ரோபோட்' படத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பின்னர் விக்ரம் நடிக்கப் போகிறார் என்றார்கள்.

கமலும் இல்லை, விக்ரமும் இல்லை ஷாருக்கான் தானே தயாரித்து நடிக்கப் போகிறார் என்றும் சொன்னார்கள். ஷாருக்கும் வெளிப்படையாக ஷங்கர் இயக்கத்தில் ரோபோவை தயாரித்து நடிக்கப் போவதாக சொல்லிவந்தார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை ஷாருக் தயாரிப்பிலிருந்து விலக அமீர்கானுக்கும், ரோபோட்டுக்கும் முடிச்சுப் போட்டு பேசப்பட்டது. கடைசியாக பில்லா படத்துக்குப் பிறகு அஜித்குமார் ரோபோட்டாக நடிக்கப் போகிறார் என்றார்கள்.

இவ்வளவு குழப்படிகளையும் தாண்டி இறுதியாக ரோபோட் ஒரு வடிவத்துக்கு வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. லண்டனைச் சேர்ந்த ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் நேற்று தந்த பத்திரிகைக்குறிப்பு இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.




ஆயினும் ‘ரோபோட்' படத்தை தொடங்குவதற்கு முன்பாக தன்னுடைய குரு இயக்குனர் பாலச்சந்தரின் கவிதாலயவுக்காக ஒரு படத்தை குறுகிய காலத்தில் நடித்துக் கொடுக்க ரஜினி ஆசைப்படுகிறாராம். மம்முட்டி நடித்து சமீபத்தில் வெளிவந்த ”கதபறயும் போள்” திரைப்படம் சூப்பர்ஸ்டாரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து கவிதாலயாவுக்காக நடிப்பார் என்கிறார்கள். அனேகமாக 'மணிசித்திரத்தாழை' மசாலா தடவி 'சந்திரமுகி'யை வரலாற்று வெற்றி பெறவைத்த பி.வாசுவே மீண்டும் ரீமேக்குவார் என்று தெரிகிறது.

சூப்பர் ஸ்டார் மீண்டும் கதை கேட்பது, டிஸ்கஷன் என்று திரையுலகில் தன்னை தீவிரமாக பிஸியாக்கிக் கொண்டிருப்பதால் ரசிகர்களும், திரையுலகினரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

0 comments: