Thursday, January 31, 2008

கமலும், ரஜினியும் இணைகிறார்கள்?


தமிழ் சினிமா ரசிகர்களின் கால் நூற்றாண்டு கனவு இது. இணைந்து பல படங்கள் நடித்த நண்பர்களான ரஜினியும், கமலும் தத்தமது முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு 25 ஆண்டுகளுக்கு முன்பாக தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தார்கள். இருவரும் கே. பாலச்சந்தர் தயாரிக்கும் படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்று சென்ற ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. அது இந்த ஆண்டு நடக்கும் என்று தெரிகிறது.

கே.பாலச்சந்தரின் தயாரிப்பில், பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படம் குசேலர். அண்ணாமலை, முத்து என்று ரஜினி நடித்த பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் நட்புக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டவை. குசேலர் திரைப்படமும் இவ்வகையிலேயே சேரப்போகிறது. குசேலர் படத்தின் மலையாள மூலமான ‘கத பறயும் போள்' திரைப்படத்தை பார்த்த ரஜினி கிட்டத்தட்ட தன் வாழ்க்கையையே திரும்பிப் பார்த்தது போல உணர்ந்தாராம். அதனாலேயே ரோபோவுக்கு முன்பாக இத்திரைப்படத்தில் நடித்துவிட அதிக ஆர்வம் காட்டினார்.

சாமனியனாக நண்பர்களோடு வாழ்க்கையை வாழ்ந்த ஒருவர், திரைத்துறையில் வாய்ப்பு பெற்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்த பின்னரும் பழைய நட்புகளுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அத்திரைப்படத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் நிஜவாழ்க்கைக்கும், உணர்வுகளுக்கும் மிகவும் நெருங்கிய வகையில் இக்கதை யதேச்சையாக அமைந்திருக்கிறது.

நட்புக்கு முக்கியத்துவம் தரும் இக்கதையில் தன்னுடைய நீண்டகால நண்பரும் ஒரு காட்சியிலாவது இடம்பெற்றால் அது தனக்கு திருப்தி தரும் என்று சூப்பர்ஸ்டார் நினைக்கிறார். எனவே படத்திலும் நடிகராக நடிக்கும் ரஜினிக்கு இன்னொரு நடிகர் விருது தருவதைப் போன்ற ஒரு காட்சியில் கமல் இடம்பெறும் வகையில் காட்சிகள் அமைக்கப்படும் என்று தெரிகிறது. தன்னுடைய திரையுலக குரு தயாரிக்கும் படம், நீண்டகால நண்பர் நடிக்கும் படம் என்பதால் மறுபேச்சில்லாமல் கமலும் சம்மதிப்பார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்ளுகிறார்கள்.

ரஜினியும், கமலும் தனித்தனியாக திரையில் வந்தாலே திரையரங்குகளில் ஆரவாரம் விண்ணை முட்டும். இருவரும் ஒரே காட்சியில் இணைந்துவந்தால் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டம் தானே?

0 comments: